நன்றி:காலச்சுவடு
நன்றி:பால் சக்கரியா -மலையாள எழுத்தாளர்
மலையாளிகளுக்குக் கம்யூனிசத்துடன் உள்ளது போலத் தமிழர்களுக்கு எந்தக் கருத்துக் கோட்பாட்டுடன் உறவுள்ளது என்று நான் பல சமயங்களிலும் யோசித்ததுண்டு. ஒருவேளை திராவிட இயக்கத்துடனிருக்கலாம். மரபார்ந்த சமூகங்கள் நவீனத்துவத்தை நோக்கிப் பயணம் மேற்கொள்ளத் தொடங்குவது கருத்துச் சார்ந்த மாற்றங்களின் பாதிப்பு உண்டாகும்போதுதான். மலையாளிகளிடையே இது போன்ற மாற்றம் படிப்படியாகத்தான் உருவானது. மிஷனரிகள் பொதுக் கல்வியைச் சாத்தியப்படுத்தின. ஸ்ரீ நாராயணன் சாதியையும் மதத்தையும் கேள்விக்குட்படுத்தினார். அச்சு மற்றும் காகிதத்தின் வருகை அறிவையும் கலாச்சாரத்தையும் வெகுசனத் தன்மை கொண்டதாக்கியது.இவை அனைத்தின் தொடர்ச்சியாகவே கம்யூனிசம் ஒரு சீர்திருத்த அரசியல் இயக்கமாகக் கேரளத்தில் வேரூன்றியது. ஒரே சமயத்தில் அது அரசியல் இயக்கமாகவும் கலாச்சார இயக்கமாகவும் இருந்தது. மலையாள இலக்கியத்தில் முற்போக்கு இயக்கத்தின் பகுதியாக மாறக் கம்யூனிசத்தால் முடிந்தது. சாதி சார்ந்த சுரண்டலையும் பொருளாதாரச் சுரண்டலையும் கேள்வி கேட்க அது அடித்தள மக்களுக்குப் பயிற்சியளித்தது. சாதியமைப்பு கேரளத்தில் தொடர்ந்தபோதும் அதற்குள்ளிருந்த அடிமை மரபுகள் முடிவடைந்தன.ஆனால் அதிகார நாற்காலிகளுடன் பழகியதோடு கம்யூனிசத்தின் இலட்சியத் தூய்மை காணாமற் போயிற்று. அதை உருவாக்க உதவிய முற்போக்குக் கேரளத்திலேயே அது ஒரு சனாதனப் பிரிவாக மாறியது. கிராமத் தொழிலாளிகளிடமிருந்தும் ஏழை விவசாயிகளிடமிருந்தும் கம்யூனிசத்தின் அக்கறை மாறி, சம்பளக்காரர்களான வெள்ளைக் காலர் ஊழியர்களிடம் மையங்கொண்டது.அவர்களிடமிருந்து மாதாமாதம் சந்தா திரட்டுவது எளிதாக இருந்தது என்பது மட்டும் அதற்குக் காரணம் அல்ல. ஊழியர்களால் கொடுக்க முடிகிற தொகையின் சிறு பங்கைக்கூட விவசாய நிலங்களில் உழைக்கும் கூலிப் பணியாளர்களால் கொடுக்க முடியாது. அது மட்டுமல்ல, இந்தக் கூலிப் பணியாளர்கள் அதிகார அமைப்பின் பகுதியாக இருக்கவில்லை. மாறாக, தலைமைச் செயலகத்திலும் ஆட்சியர் அலுவலகத்திலும் பிற அரசு அலுவலகங்களிலும். மின் வாரியம் போன்ற அரசு நிறுவனங்களிலும் பணிபுரியும் அலுவலர்களும் அதிகாரத்தின் - ஆட்சியமைப்பின் - பகுதியாக இருந்தார்கள். அவர்களைத் தன்னோடு சேர்த்து நிறுத்துவது அல்லது அவர்களோடு சேர்ந்து நிற்பது என்பதே கம்யூனிசத்தின் அதிகாரத் தந்திரமானது. அப்படியாக, ஊழல் பேர்வழிகளும் மக்கள் விரோதிகளுமான ஆயிரக்கணக்கான அலுவலர்களைக் கம்யூனிஸ்ட் தொழிற்சங்கங்கள் காப்பாற்றத் தொடங்கின.இடதுசாரி எழுத்தாளர்கள், கோட்பாடு சார்ந்த இடது இலட்சியங்களையல்ல, கட்சியின் அதிகார 'லைனை'ப் பின்பற்றவும் ஆதரிக்கவும் வேண்டுமென்று கட்சி பிடிவாதம் பிடிக்கத் தொடங்கியபோது, படைப்பாற்றல் மிகுந்த எழுத்தாளர்கள் கட்சியைக் கைவிட்டார்கள். இதன் மிகச் சிறந்த உதாரணம்: ஓ.வி. விஜயன் (பின்னர், பெண்டுலம் ஒரு முனையிலிருந்து இன்னொரு முனைவரை ஆடுவதுபோல, விநோதமான மென் இந்துத்துவச் சாய்வை விஜயன் வெளிப்படுத்தினார் என்பதை வாழ்க்கையின் கசப்பான நகைச்சுவைகளில் ஒன்றாகக் கருதினால் போதும்).கேரளத்தில் முதலாளித்துவம் மிகப் புராதனமாக இருந்த காலப் பகுதியில்தான் கம்யூனிஸ்ட் கட்சி தொழிலாளர்களை ஒருங்கிணைக்கத் தொடங்கியது. ஆனால், அந்தப் புரட்சி அங்கேயே முடிவடைந்தது. அதிகார நாற்காலியை மட்டுமே குறிவைத்த கட்சி, தொழிலாளர் அமைப்புகளைத் துஷ்பிரயோகம் செய்தது, வழி தவறச் செய்தது. கட்சி வளர்வதற்குப் 'போராட்டங்கள்' தேவையாக இருந்தன. ஆயிரக்கணக்கான உற்பத்திக்கூடங்கள் மூடப்பட்டன. தொழிலாளர்களைக் கட்சி தனது பகடைக் காய்களாகப் பயன்படுத்தியது. நம்ப முடியாதது எனத் தோன்றும் சில தளங்களைக் கட்சியின் தொழிலாளித் தந்திரங்கள் எட்டின. பார்வைக் கூலி ஓர் உதாரணம்.நீங்கள் வீடு மாறுவதாக வைத்துக்கொள்வோம். உங்களது வீட்டுச் சாமான்களை ஒரு வாகனத்திலேற்றிப் புதிய வீட்டிற்குக் கொண்டுபோய்ச் சேர்க்கிறீர்கள். அவற்றை வண்டியிலிருந்து கீழேயிறக்கத் தொடங்கும்போது அந்தப் பகுதியிலுள்ள சுமைத் தொழிலாளர் சங்கத்தைச் சேர்ந்தவர்கள் இறக்கி வைப்பதாகச் சொல்கிறார்கள். ஆனால், அவர்கள் கேட்பதோ திடுக்கிடச் செய்வதும் எந்தச் சாதாரணச் சட்டத்துக்கும் உட்படாததுமான ஒரு கூலி. கொடுக்க இயலாது என்று சொல்கிறீர்கள். சரி, நீங்களே இறக்கிவைத்துக்கொள்ளுங்கள் என்கிறார்கள். நீங்கள் இறக்கும்போது அவர்கள் பார்த்துக்கொண்டிருக்கிறார்கள். இறக்கி முடித்ததும் கேட்கிறார்கள்: இனி எங்கள் கூலியைக் கொடுங்கள். 'அதெப்படி?' நீங்கள் கேட்கிறீர்கள். 'எங்கள் வேலையை நீங்கள் செய்வதைப் பார்த்துக்கொண்டிருந்ததற்கான கூலியைத்தான் கேட்கிறோம்' என அவர்கள் சொல்லுகிறார்கள். நீங்கள் ஒப்புக்கொள்ள மறுக்கிறீர்கள். அவர்கள் பயமுறுத்துகிறார்கள். பிறகு உங்களைத் தாக்குகிறார்கள். இதுதான் பார்வைக் கூலி என்ற புரட்சிகரமான மலையாளிக் கம்யூனிசக் கண்டுபிடிப்பு.கேரளத்தின் தொழிற்கலாச்சாரத்தை இவ்வளவு அழுகிய நிலைக்குக் கம்யூனிசம் கொண்டுவந்து சேர்த்திருக்கிறது. இளம் மலையாளிகளுக்குக் கேரளத்துக்குள்ளே வேலை வாய்ப்பது அரிதாயிற்று. அவர்கள் கூட்டம் கூட்டமாக வெளி மாநிலங்களுக்கும் வெளிநாடுகளுக்கும் பயணமானார்கள். இன்று ஒவ்வொரு மலையாளியும் தனது குழந்தையைத் தயார் செய்வது கேரளத்தில் வாழ்வதற்காக அல்ல; நாடு விட்டுச் செல்வதற்காக. மலையாளிகளின் மிகச் சமர்த்தான சந்ததிகள் பதினாறு பதினெட்டு வயதாவதற்குள் நல்ல தொழிற்கல்வி தேடியும் நல்ல எதிர்காலம் தேடியும் என்றென்றைக்குமாக நாட்டை விட்டுப் போகிறார்கள்.இந்த நிலைமைக்கு வழிகோலியது கம்யூனிஸ்ட் கட்சி மட்டுமல்ல. கம்யூனிஸ்ட் கட்சியை முன்னுதாரணமாகக் கொண்டு காங்கிரசும் மற்ற கட்சிகளும் தொழிலாளிகளைச் சுரண்டின. கேரளம் இன்று இரண்டேயிரண்டு புல் தும்புகளில் தொங்கிக் கொண்டிருக்கிறது. ஒரு புல் தும்பு, சுற்றுலா. மற்றது மனித வள ஏற்றுமதி. சுற்றுலா நிலைநிற்கச் சுற்றுச் சூழல் நிலைநிற்க வேண்டும். ஆனால் சுற்றுச் சூழல் மீதே சுற்றுலாவின் பெயரில் ஆக்கிரமிப்புகள் நடத்தப்படுகின்றன. மனித வள ஏற்றுமதி வெற்றிபெற வேண்டுமானால் தரமான மனித ஆற்றல் உருவாக வேண்டும். ஆனால் ஆசிரியர்களின் அரசியலாலும் மந்தப் புத்திக்காரர்களான கல்வியமைச்சர்கள், கல்வித் துறை அதிகாரிகள் ஆகியோரின் மூடத்தனமான நடவடிக்கைகளாலும் பல்கலைக்கழக சிண்டிகேட்டின் அரசியல் புரட்டுகள் மூலமும் கல்வித் தரம் வெட்கக் கேடான நிலைக்குத் தாழ்ந்துவிட்டது.நான் இவற்றையெல்லாம் எழுத நேர்ந்தது அண்மையில் மலப்புறத்தில் நடந்த, மிக அதிகம் கொண்டாடப்பட்ட மார்க்சியக் கம்யூனிஸ்ட் கட்சியின் (சி.பி.எம்.) மாநில மாநாட்டின் பின்னணியில்தான். வி.எஸ். அச்சுதானந்தன் வழிநடத்திய மரபுவாதிகளுக்கும் பிணராயி விஜயன் வழிநடத்திய முழுமையான மரபுவாதிகளல்லாதவர்கள் என்று அழைக்கப்படும் பிரிவினருக்குமிடையில் நடந்த போட்டியில் பிணராயி விஜயன் அணி வெற்றி பெற்றது. மலையாளிகளைப் பொறுத்தவரை சி.பி.எம்.இன் முகத் தோற்றம் என்ன என்பது முக்கியமான விஷயம். காரணம், ஐந்தாண்டு இடைவேளைக்குள் மலையாளிகள் சாகவேண்டுமா வாழவேண்டுமா துன்புறுத்தப்பட வேண்டுமா மகிழ்ச்சியடைய வேண்டுமா என்பதை அந்தக் கட்சிதான் தீர்மானிக்கிறது. உலகெங்கும் கம்யூனிசம் தகர்ந்து விழுந்துவிட்டாலும், மலையாளிகள் இன்றும் அதைச் சுமந்து நடக்கிறார்கள். அல்லது மலையாளிகளைச் சுமந்து நடக்க இங்குள்ள கம்யூனிஸ்டுகள் கற்றுக் கொண்டிருக்கிறார்கள். மலையாளிகளின் வருங்காலம் எதிர்கொள்ளும் மிக முக்கியமான சிக்கல் இது. அதே சமயம் இங்கும் கம்யூனிசம் தகர்ந்துபோனதாகக் கொண்டால், அந்த இடைவெளியில் இந்துத்துவவாதி உட்பட எந்த அற்பஜீவி ஊர்ந்து வருமென்றும் சொல்ல முடியாது.திராவிட இயக்கத்துக்கும் தமிழர்களுக்குமான உறவு இப்படியானதுதானா என்று எனக்குத் தெரியாது. திராவிட இயக்கம் தமிழ் மறுமலர்ச்சியின் அடிக்கல்லாக இருந்ததென்று தெரியும். அதிகாரம் வாய்த்ததும் அது, கேரளத்தின் கம்யூனிசம்போல நசிந்ததென்று தெரியும். ஊழலுக்கும் அதிகாரிகளின் தீவினை மேலாண்மைக்கும் அது துணைபுரிந்ததென்றும் தெரியும். அதன் ஆதி இலட்சியங்களை ஒவ்வொன்றாகக் கைவிட்டதென்றும் தெரியும்.ஆனால் கேரளத்திலிருந்து பார்க்கும்போது, சரியோ தவறோ, எனக்கு ஒரு வித்தியாசம் தோன்றுகிறது. திராவிட இயக்கம் பிளவுபடவும் புரளவும் கவிழவும் வீழவும் செய்திருந்தாலும், அது தமிழ்நாட்டின் பொருளாதார சமூக வளர்ச்சிக்கும் முன்னேற்றத்துக்கும் முட்டுக்கட்டையாக இருக்கவில்லை என்று எனக்குத் தோன்றுகிறது. அரசுகள் மாறியபோதும் வளர்ச்சித் திட்டங்கள் தொடர்ந்தன. தமிழகம் அதன் எல்லாக் குறைகளுடனும் குற்றங்களுடனும் கேரளத்தைவிட எத்தனையோ மடங்கு வேகத்தில் எதிர்காலத்தை நோக்கிச் செல்கிற சமூகமாக இருக்கிறது. அதனாலேயே இன்று நான் மலையாளி களை முன்னெச்சரிக்கை செய்கிறேன். ஜாக்கிரதையாக இருங்கள். இப்போதே உங்கள் வீட்டில் அரிசி வேக வேண்டுமானால் தமிழ்நாட்டிலிருந்து அரிசி லாரி வர வேண்டும். உங்கள் அரசியல்வாதிகளைக் கட்டுப்பாட்டில் நிறுத்த நீங்கள் கற்றுக் கொள்ள வில்லையென்றால், விரைவிலேயே ஒரு நாளில் நாம் தமிழ் நாட்டின் மீதோ, கர்நாடகத்தின் மீதோ அப்பிய ஒட்டுண்ணிகளாக மாறுவோம். குறிப்புகள்:வி.எஸ். அச்சுதானந்தன்: கேரளச் சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர். மார்க்சியக் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவர்.பிணராயி விஜயன்: மார்க்சியக் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலக் குழுவின் செயலாளர்.தமிழில்: சுகுமாரன்
http://tamil.sify.com/kalachuvadu/april05/fullstory.php?id=13710543
கம்யூனிசமும் மலையாளிகளும் -ஒரு மலையாளியின் பார்வையில்
| author: செந்திலான்Posts Relacionados:
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
0 கருத்துரைகள்:
கருத்துரையிடுக